தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எப்போதுமே அரசைக் குறைகூறி வருகிறார். எதிர்க்கட்சி என்றால் அரசியல் தான் செய்யும் அவியலா செய்யும் என்று கூறியுள்ளார். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்களை போல் செயல்பட வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு செயல்படவில்லை. இதே போல் பேசி வந்தால் மக்கள் ஸ்டாலின் நிராகரிப்பார்கள் என்றார்.
மேலும் பண்டிகை காலங்களில் திரையரங்குகளை திறப்பதற்கு நாங்களும் ஆவலாக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்கு செயல்படலாம். ஒவ்வொரு காட்சியிலும் இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இடைவெளியில் மக்கள் வெளியே செல்ல முடியாது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது. இப்படியெல்லாம் வழிகாட்டி நெறிமுறைகள் இருக்கின்ற வேளையில், திரையரங்கு திறப்பது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதுபோல வரும் 28ஆம் தேதி இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அப்போது அதில் இவையெல்லாம் சாத்தியப்படுமா என்பது குறித்து அவர் முடிவு எடுப்பார். திரையரங்குகளும் திறக்கப்பட வேண்டும். அதேபோல் திரையரங்கு திறப்பதால் மக்கள் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் திமுக தலைவர் குறித்து கேலி சுவரொட்டிகள்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்