ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருகிற 29ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா, திமுக வேட்பாளர் சண்முகையா, சுயேச்சைகள் உட்பட பலரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, திமுக வேட்பாளர் சண்முகையா வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தனது தேர்தல் பரப்புரையை ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட கே.வி.கே. சாமி நகர் பகுதியில் இருந்து தொடங்கினார். இந்த தேர்தல் பரப்புரை தொடக்க நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.என்.நேரு வாக்கு சேகரித்து பேசுகையில், "ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் முடிவுக்கு பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். அவரின் ஆசியோடு ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள பிரச்னைகளை மக்களோடு மக்களாக நின்று வேட்பாளர் சண்முகையா தீர்த்துவைப்பார். ஒட்டப்பிடாரம் தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையாக கருதப்படும் குடிநீர் பிரச்னையை அவர் தீர்த்திட பாடுபடுவார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திட பொதுமக்கள் இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.