தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தெரியாமலும், பட்ஜெட் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், இந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் நான்கு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசு வருமானத்திற்கு எந்தவித வழியும் செய்யாமல், கடன் பணத்தை செலவழித்தால் தமிழ்நாட்டின் கடன்சுமை மேலும் மேலும் அதிகரிக்கும்.
வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் இந்த நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார். சிறுபான்மையினர் நலனுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சில சரத்துகளை நீக்கக்கோரி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது தொடர்பான கேள்விக்கு, "இதெல்லாம் தேவையே இல்லை. மாநிலங்களவையில், இந்த மசோதவிற்கு எதிராக அதிமுக வாக்களித்திருந்தாலே போதும் இந்த மசோதா சட்டமாக நிறைவேறியிருக்காது" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: பிரிட்டிஷ் ஆட்சி போல பாஜக ஆட்சியும் தோல்வியடையும் - திருமுருகன் காந்தி