தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா, கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீர் சுத்திகரிப்பு இயந்திர செயல்பாடு தொடக்க விழா ஆகிய விழாக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றன. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 'கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வரும்முன் காப்போம் என்ற முறையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையில் 26 இடங்களில் கால்நடை மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.
கறிக்கோழி, முட்டை சாப்பிடுவதால் எவ்வித பிரச்னையும் இல்லை என்று சுகாதாரத்துறை ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. ஆகவே யாரும் அச்சபடத்தேவையில்லை, கறிக்கோழி, முட்டை சாப்பிடலாம். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு கூடுதலாக 10 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கப்பட உள்ளது. அரசு கேபிள் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு இலவசமாக செட்பாக்ஸ் வழங்கப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, தேமுதிகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவிக்கும் பொறுப்பு அதிமுக தலைமைக்கே இருக்கின்து. தேமுகவினருக்கு கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களை அழைத்து பேசிக்கொள்வோம் என்றார். இந்தியன் 2 படபிடிப்பில் நடந்த விபத்து குறித்த கேள்விக்கு இதை ஒரு பாடமாக தான் எடுத்து கொள்ளவேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தயாரிப்பாளர்கள், படப்பிடிப்பு குழுவோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.