தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் ஒருவர் தான் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என நிம்மதியாக இல்லை.
தற்போது நில அபகரிப்பு இல்லை. மின்வெட்டு இல்லை. வன்முறை இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது" என்றார்.
கமல்ஹாசனை திமுகவினர் கூட்டணிக்கு அழைத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது அவரவரின் விருப்பம். இது குறித்து நாங்கள் கருத்து சொல்ல அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாய் தந்தையை இழந்த சிறுமிக்குத் தாயுமானவரான அமைச்சர்!