தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கரிசல்குளம், துறையூரில் தலா 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை தொடக்க விழா மற்றும், கிழவிபட்டி, துறையூரில் மக்கள் குறைகள் கேட்கும் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த போது, பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்த கேள்விக்கு, “தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், நியாயமான தேவை யாருக்கு உள்ளதோ அவர்களுக்குத் தான் அந்த தொகை சேர வேண்டும். எனவே, யார் அதற்கு தகுதி உள்ளவர்கள் என்னும் கணக்கெடுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் அந்த தொகை செப்டம்பர் மாதம் கொடுப்பதற்கான பணிகள் முதல்வர் கையால் தொடங்கும்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். பின்னர் கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு உறுப்பினர் பாஜகவை சேர்ந்த விஜயகுமார், தனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை கடந்த நான்கரை ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: கோட்சே போல மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் மாற மாட்டார்கள்: சபாநாயகர் அப்பாவு
இருந்த போதிலும் பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய பிரச்சினை குறித்து பேசி கொண்டு இருந்தார். எனது வார்டில் 1,532-க்கும் மேற்பட்ட வாக்குகள் உங்களுக்கு (கனிமொழி எம்.பி) விழுந்து இருக்கிறது என்றும் எனவே எங்களது கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசியதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையெடுத்து திமுகவினர் அவருடன் வாக்குவாதம் செய்ய முற்படவே அவர்களை காவல் துறையினர் தடுத்து, விஜயகுமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விஜயகுமாரின் தொடர் பேச்சால் எரிச்சலடைந்த அமைச்சர் கீதாஜீவன் "தம்பி சீன் போடாதே" என்று பலமுறை கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து வசதி கோரிய மக்களுக்காக முதலமைச்சர் போட்ட உத்தரவால் கூடுதல் பேருந்து இயக்கம்.. குஷியான கிராமம்!