தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு பகுதி, புள்ளி மான்கள் வாழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அரசால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இதுதவிர திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியையும் புள்ளி மான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்துள்ளது.
தற்போது கரோனா ஊரடங்கால் சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக ஊருக்குள் வந்து செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
கம்பிவேலிக்குள் சிக்கி மான் பலி இதைப்போன்று தூத்துக்குடியில் மக்கள் நெருக்கம் மிகுந்த புதிய பஸ் நிலையம் மீனாட்சிபுரம் பகுதியில் ஆண் புள்ளி மான் ஒன்று தனியார் நிறுவன அலுவலக வளாகத்திற்குள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் தூத்துக்குடி வனச்சரக அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளி மான் ஊருக்குள் இறந்தது குறித்து விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் வழி தவறி ஊருக்குள் புகுந்த புள்ளி மான், சுற்றிலும் கம்பி வேலி பாய்ச்சப்பட்ட தனியார் தொழில் நிறுவன வளாகத்துக்குள் புகுந்துகொண்டது.
அங்கிருந்து தப்பிச்செல்ல நடந்த முயற்சியில் காம்பவுண்ட் சுவற்றில் மோதியும், கம்பி வேலியால் உடலில் ஏற்பட்ட காயத்தாலும் புள்ளி மான் உயிரிழந்துள்ளதாக வனச்சரக அலுவலர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் குழுவினர் கொண்டு உயிரிழந்த ஆண் புள்ளி மானுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு சாலிக்குளம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளிமான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.