தூத்துக்குடி, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாலத்தீவு, மினிகாய் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தோணிகள் மூலமாக சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மங்களூரிலிருந்து ஹஸ்ஸன் அல்லாஹ் என்ற தோனியில் சரக்குகள் ஏற்றிக்கொண்டு மாலுமி உள்ளிட்ட ஆறு பேர் மினிகாய் தீவுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் கடந்த 20ஆம் தேதி மினிகாய் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது, தோணி பழுதாகி புயலில் சிக்கிக் கடலில் மூழ்கி உள்ளது. இதனால் உயிர்காக்கும் படகில் ஆறு பேரும் தப்பி கடலில் தத்தளித்து உள்ளனர்.
இதற்கிடையே, தூத்துக்குடியிலிருந்து மினிகாய் தீவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு தோணியில் திரும்பி வந்தவர்கள், கடலில் தத்தளித்தவர்களைக் கண்டு அவர்களை மீட்டுள்ளனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் அவர்கள் மங்களூருவைச் சேர்ந்த மாலுமி பஷீர் அகமது ஆதம், தலைமை இன்ஜினியர் இக்பால் மம்மூது மெப்பேணி, தொழிலாளர்கள் ஜக்காரியா அகமது, சலீம், முகமது இலியாஸ் சம்பானியா, முகம்மது உசேன் ஆகியோர் என்பது தெரியவந்தது. தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்தத் தோணியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வர்.
பின்னர் உரிய அனுமதி பெறப்பட்டு, வேன் மூலம் மங்களூரு துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.