தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். அப்போது அவருடன் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், "திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியின்படி 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கவும், பால் விலையை குறைத்தும், கொள்முதல் விலையை அதிகரித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆகவே, மக்களுக்கு பயன்படுகின்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திமுக அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவதற்கு மக்கள், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கலைஞர் 8 அடி பாய்ந்தால் மு.க. ஸ்டாலின் 16 அடி பாய்வார்: பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்