தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஹாக்கி மைதானத்தில் 400 ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி மட்டை வழங்கி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, வானரமுட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து திமுக ஆட்சியில் நிறைவேற்ற பட்ட சாதனை திட்டங்கள் குறித்தும், தமிழ்நாடு அரசின் ஊழல் நிர்வாகம் குறித்தும் பேசினார்.
இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் பிக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பயீர் காப்பீடு:
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மானாவாரி விவசாயிகளுக்கு விரைவில் நஷ்டஈடு, பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
தொடர்ந்து நாங்கள் மழைநீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து தண்ணீரை அப்புறப்படுத்தி வருகிறோம். தண்ணீர் தேங்கிய பின்னர் அப்புறப்படுத்துவது தீர்வு இல்லை. இதற்கு நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்க அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதனால் தான் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் ரசிகனா மு.க.ஸ்டாலின்?
இன்னொரு கட்சியை பற்றி நான் கூறவிரும்பவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்குச் சென்று, சில ஆலோசனைகளை செய்து விட்டு, சசிகலாவை எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, இதை பற்றி அவர்கள் கட்சியினர் தான் முடிவெடுக்க வேண்டும். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் ரசிகன் என்று தான் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் தொண்டன். எம்.ஜி.ஆரின் பெயரை நாங்கள் அரசியல் லாபத்துக்காக எடுக்கவில்லை. எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை ரசித்திருக்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு காலக்கட்டத்தில் கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் தான் எம்.ஜி.ஆர். அதனால், ஸ்டாலின் சொல்வதில் தவறில்லை. எம்.ஜி.ஆரை அரசியலுக்காக யாரும் பயன்படுத்தவில்லை.
தனக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கக்கூடிய சந்தேகங்களை கூட தீர்ப்பதற்கு தயாராக இல்லாத ஒரு அரசு, யாரை பற்றியும் பேசக்கூடாது. அவரது மரணத்தில் இருக்கக் கூடிய சந்தேகங்களை தீர்க்கட்டும். அதன் பின்னர் மற்றவர்கள் மீது விமர்சனங்களை வைக்கட்டும். திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகச்சிறப்பாக உள்ளது. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது - கனிமொழி குற்றச்சாட்டு!