தூத்துக்குடி: சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த்தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் மற்றும் அமைச்சர்களை கீழ்த்தரமாக பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கனிமொழி, 'நிச்சயமாக பத்திரிகையாளர்களையோ யாரையுமே இழிவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய ஒருவர், அலுவலராகப்பணியாற்றினேன் என்று சொல்லக்கூடிய ஒருவர் இப்படி பத்திரிகை நண்பர்களையும், மற்ற பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் பற்றியும் பேசுவது அவர்களுடைய தரத்தை என்ன என்று காட்டுகிறது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சித்த அண்ணாமலை!