சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகனின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், எட்டயபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், காவல்துறையினர் அடித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களின் மனதில் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.
கடந்த 20ஆம் தேதி எட்டயபுரம் பைபாஸ் சாலையில் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தியை நான்கு காவலர்கள் தாக்கியுள்ளனர். இதில், மனமுடைந்து காணப்பட்ட கணேச மூர்த்தி, நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, உயிரிழந்த கணேசமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "இது தனியாக எங்கேயோ நடக்கக்கூடிய விஷயமல்ல. தொடர்ந்து பலபேர் தாக்கப்படுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சிலர், சிறையிலேயே மரணம் அடையக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. இதெல்லாம் நிறுத்தப்படவேண்டும். அதற்கு சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். சட்டங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறும் தூத்துக்குடி' - ஸ்டாலின் காட்டம்