உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று, தற்போது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்தவரிசையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
போல்டன்புரம், ராமசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், கயத்தாறு, ஆத்தூர், காயல்பட்டினம், பேட்மாநகரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதி மக்கள் உள்ளிருந்து வெளியே செல்வதற்கும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடியில் நேற்றைய (ஏப்ரல்.9) தினம் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதில் தனியார் மருத்துவமனையில் "லேப் டெக்னீசியன்" வேலை பார்க்கும் பெண் ஊழியர், அவரது கணவர், மாமியார் உள்ளிடோரும் அடங்குவர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் ஊழியரின் மாமியார் இன்று மாலை 5 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பெண்ணின் வயது 71 ஆகும். கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!