தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுவந்தது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒரு குறிப்பிட்ட நிதியை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில்தான் ஆலை தொடங்கப்பட்டது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்பட்ட தொகையில் இருந்துதான் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுவந்தன. ஆலையை மூடிய பின்பு அவர்களிடமிருந்து எந்த ஒரு நிதியும் பெறவில்லை. தற்போது அவர்கள் செலுத்திய வைப்புத்தொகையில் வரும் வட்டியிலிருந்துதான் அந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன.
ஆலை தொடர்பாக ஊடகங்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். ஆலை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட தெளிவான அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேவையற்ற பீதியை கிளப்பியதன் காரணமாகதான் தூத்துகுடியில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது" என்றார்.