தூத்துக்குடி: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்த தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனரும் தலைவருமான இயக்குனர் கௌதமன் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்து இறங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தாங்களே நீதிபதிகளாக இருந்து நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு அம்சமான கிராம சபை கூட்டத்தை கடைசி நேரத்தில் தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
தமிழ்நாட்டில் உடனடியாக கிராமசபை கூட்டங்கள் நடத்திட அரசு உத்தரவிட வேண்டும். விவசாயிகளையும், மீனவர்களையும் பாழ்படுத்துகிற குரூரமான பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதா. விவசாயிகளையும், மீனவர்களையும், பொதுமக்களையும் வயிற்றில் அடித்து நீங்கள் ஆட்சி நடத்தி விடலாம். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நினைப்பு உங்களுக்கு கனவில் கூட வர வேண்டாம்.
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில் போராட்டத்தின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கட்டவிழ்த்து விட்டு அவர்களை கொன்று உறவினர்களுக்குக் கூட தெரியாமல் எரித்த செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகார திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பு எழுதும் அம்சமாக கிராம சபை கூட்டத்தை உடனே நடத்திட வேண்டும். மாணவர்களை, விவசாயிகளை, மீனவர்களை, பொதுமக்களை பாழ்படுத்தும் திட்டங்களை திணிக்கத் திணிக்க எதிர்காலத்தில் வரலாறு காணாத தோல்வியைத்தான் மக்கள் பரிசாக வழங்குவார்கள்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சிக்குள் நடக்கும் போராட்டத்தை இபிஎஸ், ஓபிஎஸ் பண்படுத்தப்பட்ட நாடகமாக நடத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
மத்திய அரசின் ஜனநாயகத்தை நெறிக்கும் திட்டங்களை கை கட்டிக்கொண்டு அமல்படுத்தும் ஆட்சியாக இங்குள்ளவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் நடக்கும் கூத்து, சசிகலா வருகைக்கு பின்னர் ஆடித்துடிப்பவர்கள் அனைவரும் அடங்கிப் போவார்கள்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் பேரரசு கட்சி நிச்சயமாக போட்டியிடும். அதில் தமிழ் உரிமைக்காக போராடும் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஓரணியில் நின்று போட்டியிடுவோம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலையில் கிடந்த கரோனா பரிசோதனை குப்பிகள்: தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்!