தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதையடுத்து, திருட்டுப்போன செல்போன்களை உடனடியாக மீட்க சைபர்கிரைம் காவல்துறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சுமார் 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டன.
மேலும், மீட்கப்பட்ட செல்போனை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று (டிச.9) நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை டிஐஜி பிரவீன் குமார் அபிநபு உரியவர்களிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 453 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மக்கள் மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், போதைப் பொருள் கடத்தியதாக 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, திருச்செந்தூர் கோயிலில் பக்தரிடம் 36 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை பணம் கொள்ளை அடித்த கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.