தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு, 16 வயது சிறுமியைக் குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தூத்துக்குடி சவேரியார் புரத்தைச் சேர்ந்த ஜேசுராஜா மகன் டால்வின் (37) என்பவரை, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து, கடந்த 03.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். மேலும், இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், இன்று (அக்.30) குற்றவாளியான டால்வின் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இழப்பீடு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், இவ்வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ரேவதி, எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.
இதையும் படிங்க: போட்டியில் வென்ற காளையின் காலை வெட்டிய மர்ம கும்பல் - கண்ணீருடன் உரிமையாளர் பேட்டி...