மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “தவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காகவும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற "கல்வி கடனை" வசூல் செய்து கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் பெரும் முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் அமைப்பு ரீதியாக திரண்டிருப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஓரளவு வசதியானவர்களுக்குதான் கிடைக்கிறது. ஆனால் எதும் இல்லாத சாதாரண மக்களுக்கு எந்த திட்டமும் கிடைப்பதில்லை. கறுப்புப் பணம் ஒழிந்தது என்று மோடி அரசினர் கூறி வருகிறார்கள்.
ஆனால் அந்த கறுப்புப்பணம் யாருக்கும் வந்து சேரவில்லை. நம்மை நாம் சுய விமர்சனம் செய்ய வேண்டிய நேரம் இது. இந்தியாவிற்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை மக்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோம். அதனால்தான் ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைக்கவில்லை. நாம் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மோசமான அரசு உள்ளது. எல்லா அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தன்மானத்தையே விட்டுக்கொடுத்த கட்சி அதிமுகதான்” என்றார்.