தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காங்கிரஸ் வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவந்தவர் சந்திரமோகன் (57). தேர்தலை முன்னிட்டு இவர், கட்சிப் பணிகள் செய்து வந்தநிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 34ஆவது வார்டில் சந்திரமோகன் வாக்களித்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பினும் தேர்தலில் வாக்களித்த அவர், வாக்குச்சாவடிக்கு வெளியே வருகையில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அருகிருந்தவர்கள் சந்திரமோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரமோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே காங்கிரஸ் பிரமுகர் மயங்கிவிழுந்து இறந்த தகவல் அறிந்த அதிமுக வேட்பாளரும், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு, அவரின் வீட்டிற்குச் சென்று சந்திரமோகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இறந்த சந்திரமோகனுக்கு, ஜோதிலட்சுமி (54) என்ற மனைவியும், மகள் சொர்ணலட்சுமி (25), மகன் பிரகாஷ் (13) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். வாக்களிக்க வந்தவர் வாக்குச்சாவடி மையம் முன்பே மயங்கிவிழுந்து இறந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.