தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூப்பன்பட்டி ஊராட்சிமன்றத்தலைவராக பாஜகவைச் சேர்ந்த லிங்கேஸ்வரி கருணாநிதி பணியாற்றி வருகிறார்.
இதே ஊராட்சியில் துணைத் தலைவராக அவ்வூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பாண்டி என்பவரின் மனைவி மாரியம்மாள் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஊராட்சிமன்றம் மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யவிடாமல் தடுப்பதாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், தற்போதைய ஊராட்சிமன்ற துணைத் தலைவர், அவருடைய கணவர் ஆகியோர் மீது லிங்கேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
ஊழல் செய்ய வற்புறுத்துதல்
இது குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் லிங்கேஸ்வரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எங்களது ஊராட்சியில் நான் பதவி ஏற்ற நாள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுநலத்தோடும், சமூகநீதியோடும் வேலை செய்து வருகிறேன்.
ஆனால், என்னை பணி செய்ய விடாமல் எங்கள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாரியம்மாள், அவரது கணவர் பாண்டி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மாரீஸ்வரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தடுத்து வருகின்றனர்.
எங்களது ஊராட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுகாதாரம், குடிநீர், நிர்வாகப் பராமரிப்பு, செலவினங்கள் என எதற்கும் ஊராட்சிமன்ற நிதியை எடுக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். ஆனாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எண்ணி நான் எனது சொந்த நகைகளை அடகு வைத்து மக்களுக்கான பணிகளை செய்து வந்தேன்.
ஆனால், இனியும் என்னால் தனிப்பட்ட முறையில் எந்தப் பணிகளையும் செய்ய முடியாது என்பதால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், அவரது ஆதரவாளர்கள் எனக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், கூட்டு சேர்ந்து ஊழல் செய்ய வற்புறுத்துகின்றனர்.
இரட்டை நாடகமாடும் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்
இதை செய்ய மறுத்ததால், முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் மாரீஸ்வரன் தூண்டுதலின்பேரில் ஊராட்சி மன்ற செலவினங்களுக்குரிய பணத்தை எடுக்க முடியாதபடிக்கு துணைத் தலைவரை கையொப்பமிடவிடாமல், அவரது கணவர் பாண்டி தடுத்து வருகிறார். இவர்களின் இந்தச் செயலுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீனிவாசனும் உறுதுணையாக செயல்படுகிறார்.
ஊராட்சிமன்ற நிதிகளை எடுத்து எந்த பணிகளையும் செய்ய முடியாதபடிக்கு எனக்கு நெருக்கடி கொடுக்கும் அதேசமயம் ஊராட்சியில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. எனவே, நிர்வாக சீர்கேட்டை ஆய்வு செய்யும்படி அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மாரீஸ்வரன் இரட்டை நாடகமாடி வருகிறார்.
எனவே, ஊராட்சிமன்றப் பணிகளுக்கு இடையூறாக செயல்படுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிராமத்தின் நலன் கருதி ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் அலுவலரை நீக்கி, அதனை மூத்த உறுப்பினர்களிடமோ அல்லது மாவட்ட நிர்வாகம் தற்காலிமாக அலுவலரை நியமித்து அவரிடமோ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வழக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு