தூத்துக்குடி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது.
இடைவிடாது பெய்த அதிக கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை, வெள்ளத்திற்கு ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் பெய்த கனமழை தற்போது நின்றுள்ளதால், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேபோல், மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதன்படி, தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சகம் ஆர்.தங்கமணி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகிய 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வுக்குப் பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு, மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது. அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓய்ந்த கனமழை.. நெல்லையில் ரயில் சேவை சீரானது!