தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தவர், அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
மேலும் 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூபாய் 6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் மனுதாரராக இணைக்கக்கோரி, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 80 சதவீதம் முடிவடைந்து உள்ளதால், இதில் அமலாக்கத் துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் அமர்வு முன்னிலையில் இன்று (ஜூலை 19) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தம், மூத்த மகன் ஆனந்த பத்மநாபன் ஆகியோர் ஆஜராகாத நிலையில், இளைய மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் சேது மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மதுரையைச் சேர்ந்த மனோகரன் என்ற வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006இல் தொடர்ந்த வழக்குதான் இது. அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டால், மற்ற அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமலாக்கத்துறை நுழையும் நிலை ஏற்படலாம். இதனால் பல அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Ponmudi ED Raid: நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள்.. 6 மணி நேரம் நடந்த 2ஆம் நாள் விசாரணை!