தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி சுப்பையா (43). இவருக்கு மனைவி தமிழ்ச்செல்வி (31), மகன் லோகேஷ் (14), மகள்கள் கௌரி (12), ஹரிஷ்கா ஸ்ரீ (10) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து எப்போதும்போல் நேற்றும் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக் கேட்பதற்காக தமிழ்ச்செல்வியின் தம்பி செல்வகுமார் (28), மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் மண்வெட்டி கணையால் சுப்பையாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
அப்போது சுப்பையா உயிருக்குப் பயந்து வீட்டின் கழிவறைக்குள் பதுங்கியுள்ளார். இருப்பினும் அவரை விடாமல் துரத்திய செல்வக்குமார் சராமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும் அவரது மனைவி, குழந்தைகள் கண்முன்னே இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல் துறையினர், சுப்பையாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவான செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.