தூத்துக்குடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவாகி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாகச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மழையின் காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீர் தேங்கியது. அந்த பாலம் வழியாக மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து சுரங்கப் பாலத்தில் தேங்கி இருந்த மழைநீரில் சிக்கிக் கொண்டது.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் இருந்த 28 பயணிகளையும், கிரேன் இயந்திரத்தைக் கொண்டு பேருந்தையும் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப் பாலம், லட்சுமி மில் ரயில்வே சுரங்கப் பாலம் ஆகியவற்றிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல், அத்தை கொண்டான் பகுதியில் உள்ள பாலம் மழை நீரில் மூழ்கியது. கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி நாலட்டின் புதூர், இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம், வானரமுட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தொடரும் கனமழை.. 5 மாவட்டங்களில் இன்று(நவ.9) பள்ளிகளுக்கு விடுமுறை!