தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவத்திலிருந்து ஒரு மாத விடுப்பில், தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு ராணுவ வீரர் வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராணுவ வீரரைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவம் அறிந்து அங்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், சடலமாகக் கிடந்த ராணுவ வீரர் வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்பு இது தொடர்பாக அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
மேலும், விளாத்திகுளம் (பொறுப்பு) டி.எஸ்.பி லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், தனிப்படை போலீசார் கொலை செய்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, ராணுவ வீரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக, வெம்பூர் கிராமம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!