தூத்துக்குடி: கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பரமசிவம் நினைவுப்படம் மற்றும் நூலகம் திறப்பு விழா வழக்கறிஞர் சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் பரமசிவம் திருவுருவப்படத்தினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். அதன்பின் நூலகத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமி நாதன் திறந்து வைத்தார். அப்போது நீதிபதி புகழேந்தி பேசுகையில், “கோவில்பட்டி நீதிமன்றத்தில்தான் எனது பணியை தொடங்கினேன். வழக்கறிஞர் பணிக்கு வர காரணம் எனது சித்தப்பா மூத்த வழக்கறிஞர் பரமசிவம்தான் காரணம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வந்த பின்னர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சென்னை சென்று வாதாடினோம். காரணம் எனது சித்தப்பா பரமசிவம் தான்.
ஆங்கில அறிவு குறைவு என்பதால் பலரும் உயர் நீதிமன்றத்தில் வாதட தயக்கம் காட்டுகின்றனர். 200 எம்பிக்களும் வைகோவும் சமம் என்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூறியுள்ளார். ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் வைகோவை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அத்தகைய புகழ்மிக்க வைகோ கலந்து கொண்டது மகிழ்ச்சி” எனப் பேசினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “நீதி எல்லோருக்கும் உரியது. மக்கள் மன்றத்தின் தீர்ப்பு தான் முதன்மையானது. 11ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நீதி இருந்தது. நீதியை மதிக்கும் மாண்பு இங்கு உள்ளது. நீதிமன்றங்களில் போராடியவர்கள், நீதிக்காக போராடியவர்கள், மனித குலத்திற்காக போராடியவர்கள் பலர் உள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: சத்யாவிற்கு நேர்ந்த துயரத்தால் நொறுங்கிப் போய்விட்டேன் - முதல்வர் உருக்கம்