தூத்துக்குடி: லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா ரகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்!
கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் காட்சிகள் தற்போது கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, படப்பிடிப்பு முடிந்து சென்னை செல்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது, "புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்காக 1977ல் வந்தேன். அதன்பிறகு 40 ஆண்டு காலம் கழித்து தற்போது சூட்டிங்காக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். தென் மாவட்ட மக்கள் அன்பான மக்கள். இவர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது" என்றார்.
லியோ பட ரிலீஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். அதற்காக நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்" என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மற்றொரு கொடூரமான ஞாயிறு" - சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்சியாளர்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!