தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கீரனூரைச் சேர்ந்தவர் நாராயண குமார் (வயது 44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் சித்திக்கும் நிலப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி நாராயண குமாரை, சங்கரலிங்கம் தரப்பினர் தாக்கி அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாக அவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் தாமதித்து வந்ததாக நாராயண குமார் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சங்கரலிங்கம் உள்பட 3 பேர் இன்று (டிச. 1) வீடு புகுந்து நாராயண குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தடுத்த நாராயணகுமாரின் மனைவி ஷோபனாவையும் கையில் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கரலிங்கம் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மிதமுள்ள நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக நாராயண குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரன்பீர் கபூரின் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷனில் வெளியான அனிமல் திரைப்படம்..! ரசிகர்கள் வரவேற்பு!