தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). மீன்பிடித் தொழிலாளரான இவருக்கு சாந்தி (35) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜன.10) அதிகாலை முத்துக்குமார் வழக்கம் போல் கடல் தொழிலுக்குச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
மூன்றாவது குழந்தையான சிறுவன் அஸ்வின் குமார் (7) மட்டும், காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அஸ்வின் குமாரின் தாய் சாந்தி, மகளிர் குழுவில் பணம் வாங்குவதற்காக காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது, சிறுவன் அஸ்வின் குமார் மட்டும் வீட்டில் தனிமையில் மொபைல் போன் பார்த்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்குள் இருந்த சிறுவன் அஸ்வின் குமார், கழுத்தில் கத்தி குத்துக்களுடன் ரத்தம் சிந்தியவாறு கூச்சலிட்டபடி வீட்டிற்கு வெளியே ஓடி வந்து, எதிரில் உள்ள கடலோர காவல் நிலைய வாயிலில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, இதனைக் கண்டு உள்ளிருந்து வந்த கடலோர காவல் துறையினர், உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட தன்பாலின காதலர்கள்.. போலீசார் தீவிர விசாரணை!
தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான போலீசார், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுவன் அஸ்வின் குமாரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதையடுத்து, சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடவியல் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து தற்போது சூரங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் வேம்பாரையைச் சேர்ந்த சில இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணங்களிலும் போலீசாரின் விசாரணை தொடர்கிறது.
இந்த நிலையில், கடலோர காவல் நிலையம் வாயிலில்7 வயது சிறுவன் அஸ்வின் குமார் கழுத்தில் கத்தி குத்துக்களுடன் கூச்சலிட்டபடி ஓடி வந்து, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை - நடந்தது என்ன?