தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை லோக் அதாலத் நிகழ்வு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
"ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுபோல் வருகிற 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் காசோலை மோசடி வழக்குகள், வங்கி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், தண்ணீர், மின்வரி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், வருவாய் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
சனிக்கிழமை நடைபெற உள்ள லோக் அதாலத் நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலர்களும் வழக்குதாரர்களும் கலந்துகொண்டு நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சமாதானமாகப் பேசி தீர்வு எட்ட உள்ளனர். ஆகவே வழக்குரைஞர்களும், வாதிகளும் லோக் அதாலத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமுகமான முறையில் வழக்குகளுக்கு தீர்வு எட்டலாம். லோக் அதாலத் மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. வழக்கு தீர்ப்பின் நகல் வழக்குதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
லோக் அதாலத் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து மொத்தம் மூவாயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலமாக ரூ. 5 கோடிக்கும் மேல் வழக்குகளில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வு மூலமாக ரூ. 5 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதிலும் 14 அமர்வுகளில் நடைபெறும் லோக் அதாலத் நிகழ்ச்சி திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் அமர்வு நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரம் வழக்குகள் தீர்வு எட்டப்படாத வழக்குகளாக நிலுவையில் உள்ளன. இதில் லோக் அதாலத் நிகழ்வின் மூலமாக தீர்வு காணப்படவேண்டிய வழக்குகளாக 13 ஆயிரம் வழக்குகள் இனம் காணப்பட்டு அவற்றிலிருந்து மூவாயிரத்து 705 வழக்குகள் முதற்கட்டமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
லோக் அதாலத் நிகழ்ச்சியில் விசாரணைக்கு பட்டியலிடப்படாத வழக்குதாரர்களும் நேரடியாக கலந்துகொண்டு தங்களின் பிரச்னைக்கு சுமுக முறையில் தீர்வு காணலாம்" என்றார்.