திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக திருச்சி மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினு பாலன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தான் ஆட்சியை அமைக்கும். அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. கரோனா தொற்று என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் தற்போது குறைந்து வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தான் முடிவு செய்வார்கள். நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவு குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது நீதிமன்றத்தின் முடிவு. தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.