கர்நாடக மாநிலம், மைசூரு ராமகிருஷ்ண நகரைச் சேர்ந்த யோகேஷ் என்பவரின் மகன் கரண்படேல்(21). திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கரண்படேல், கடந்தாண்டு வெளிநாடு சென்று படிக்கும் எண்ணத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் படிப்பை தொடரும் நோக்கத்தில் கடந்த வாரம் கரண்படேல் தனது பெற்றோர்களுடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வந்துள்ளார்.
அப்போது மாணவரிடம் மருத்துவச் சான்றிதழ் கொண்டுவராததால், அவரை அங்கிருந்த நிர்வாகிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கரண்படேலின் பெற்றோர்கள் பனகல் சாலையருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவரை தங்கவைத்துவிட்டு மருத்துவ சான்றிதழ் வாங்க மைசூரு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கரண்பட்டேலுக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் திரிவேணி, தனது மகன் குறித்து விடுதி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். பின்னர் விடுதி ஊழியர்கள் கரண்படேல் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அறையில் இருந்த மின்விசிறியில் கரண்படேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கரண்படேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.