திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து விவசாயிகள் தீவிரமாக அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வலங்கைமான், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி 10 நாள்களைக் கடந்தும், அந்தந்த பகுதிகளில் இதுவரை செயல்பட்டு வந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளன.
இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை தங்களுடைய வீட்டிலேயே அடுக்கி வைத்துக் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், ஈரப்பதம் குறைந்தும் எலித்தொல்லைகள் மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் இதுவரை செயல்பட்டு வந்த 464- அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துத் திறக்க மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி - களத்தில் இருப்பதோ வேற நிலை..!