திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கதிராமங்கலம், தலையூர், பாவட்டகுடி நெடுங்குளம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் தங்களது வீட்டிலேயே 10 நாள்களுக்கும் மேலாக அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு இடத்தை தயார் செய்து வைத்தும், சாக்குப்பை இயந்திரங்கள் வந்துசேரவில்லை. வீட்டிலேயே நெல் மூட்டைகளை வைத்திருப்பதால் எலிகள் சேதமாக்குகின்றன. ஈரப்பதம் குறைந்து கொண்டே வருகிறது. எதிர்பார்த்த விலை கிடைக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
எனவே, எங்களது வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கதிராமங்கலம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.