திருவாரூர்: நடப்பு ஆண்டில், சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில், விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கான குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அண்மையில் அறிவித்தது விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதை மானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்காமல், உரமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள்
'இந்த ஆண்டு குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இருந்தபோதிலும் குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் விதை மானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகளின் குறைதீர் கூட்டத்தில், குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதை மானியமானது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது. அதனை விவசாயிகள் உரங்களாக பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தியது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறுவைப் பணிகள் முடிவுற்று அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளதால், நாங்கள் உரங்களைப் பெறுவதில் ஒரு பயனும் இல்லை.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு விதை மானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரும்பு காட்டுக்குள் புகுந்த சிறுத்தை- கிராமத்தினர் அதிர்ச்சி