திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்தரசன் வருகைதந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் மத்திய அரசு மக்களின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் சொந்த கொள்கையை அமல்படுத்த நாடாளுமன்றத்தைப் பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் இந்தச்செயல் பல எதிர் விளைவுகளை உண்டாக்குமென்றும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு மத்திய மாநில அரசு மதிப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், "ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. பெரியார் பற்றி தான் பேசிய கருத்து மறக்கப்பட வேண்டியது எனக் கூறிவருகிறார். மறக்கப்பட வேண்டிய கருத்து என்றால் அதை ஏன் மக்கள் மத்தியில் கூற வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்தை திசை திருப்பவே மத்திய அரசு நடிகர் ரஜினியை பயன்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: