திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் புதியதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டுமானப் பணிக்கான இடத்தை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து, நன்னிலம் அருகேயுள்ள ராஜகாளிபுரம் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், பூங்குளம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் ஆகியவற்றை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது பொய்யான வழக்குகளை ஜோடித்து அவரை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கி பாதிப்பை ஏற்படுத்தியது மு.க.ஸ்டாலின், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் க. அன்பழகன்தான்.
இந்த வழக்கை வெளிமாநிலத்தில் மாற்றி அலைக்கழித்து பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுத்தியவர்களும் திமுகவினர்தான். ஆனால், இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஜெயலலிதா மீதும் அவர் வளர்த்த இயக்கத்தின் மீதும் பாசமாக இருக்கிறார்கள்.
இதை எப்படியாவது திசை திருப்பலாம் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிச்சயமாக நடக்காது. ஜெயலலிதாவை ஆதரித்த மக்கள் நிச்சயமாக அதிமுகவைதான் ஆதரிப்பார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது’-அமைச்சர் காமராஜ்!