திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மண்ணுக்கு முண்டான் ஊராட்சிக்குள்பட்ட கர்ணாவூர் கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கிராம மக்களின் குடிநீர்த் தேவைக்காகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர்த்தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.
பின்னர் நாளடைவில் பராமரிப்பின்றி நீர்த்தேக்கத் தொட்டியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வலுவிழந்தது. இதனால் நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீரை முழுமையாகத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நீர்த்தேக்கத் தொட்டியின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழியாகக் குடிநீர் வெளியேறி அருகில் உள்ள கால்வாயில் சென்று கலக்கிறது.
இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகள் அருகில் சென்று விளையாடும்போது இடிந்து விழ வாய்ப்புள்ளதாகப் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்னர் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு கிராம மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தேக்கிவைக்க புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் விரைந்துசெயல்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.