திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் தாக்கத்தால் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் சாய்ந்தது. மேலும், மின் கம்பங்கள், மரங்கள் வீடுகளின் கூரைகளில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத்தொகை, நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிலையில், பல இடங்களில் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவாதிரை மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண பொருட்களையும், நிவாரண பணத்தையும் கிராம நிர்வாக அலுவலரே, பாதிக்கப்பட்டவர்களின் கையெழுத்திட்டு மூன்று லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்ததாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பாக மனு அளித்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்திட்டு மோசடி செய்த ஆவணங்களைப் பெற்று, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மனு அளித்தனர்.