திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக பூண்டி கே. கலைவாணன் அறிவிக்கப்பட்டதையொட்டி, தன் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள திரு. வி. கல்யாண சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் இலக்கான 234 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக முதல் பணியாக திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் 100 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம். மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், விவசாயிகள், சிறுபான்மை சமுதாயத்தின் ஆகியோர் ஒன்றிணைந்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என முடிவெடுத்துள்ளோம்” என்றார்.
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தாயாரான அஞ்சுகத்தம்மாளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு