திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், பொதுமக்களை தங்க வைப்பதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள திருநெய்ப்போர் பள்ளி கட்டடம், ஆரூரான் திருமண மண்டபத்தை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “நிவர் புயலை எதிர் கொள்வதற்கு பல சீரிய நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வடகிழக்கு பருவ மழையின் போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் வசதிகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கும் அவர்களை தங்க வைப்பதற்கான முகாம்களும் போதுமான வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவு பொருள்கள் அனைத்தும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்காக ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் சுழற்சிமுறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பயிர் காப்பீடு என்பது உரிய நேரத்தில் கட்ட வேண்டியது என்பது அவசியம். அப்போது, தான் மழைக் காலத்திலோ அல்லது புயல் பாதிப்பு ஏற்படும் நேரத்தில் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகள் பெற முடியும். உரிய நேரத்தில் விவசாயிகள் எளிதாக பயிர் காப்பீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அவ்வப்போது மின்சார துண்டிப்பால் ஏற்படும் நெட்வொர்க், சர்வர் போன்ற பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் சரிசெய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு வழங்குவதில் ரூ.40 லட்சம் முறைகேடு - திருவாரூர் விவசாயிகள் குற்றச்சாட்டு!