வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெய்த தொடர் கன மழையால், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளான கதிராமங்கலம், வாதண்டூர், கொட்டூர், குருங்குளம், பாவட்டகடி, பூங்காவூர், சங்கமங்கலம், காளியாகுடி உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழையால் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி உள்ளிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியுள்ளன.
ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் வயலில் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது போதுமானதாக இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கூடுதலாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.