திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து ஆட்சியர் ஆனந்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள வலங்கைமான், நீடாமங்கலம், அரித்துவாரமங்கலம், செம்மங்குடி, நல்லாம்பூர், பெருங்குடி உள்ளிட்ட 13 கிராமங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு தொகை விடுபட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கட்டியும் 13 கிராமங்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. நீடாமங்கலம் சுற்றிய ஒரு சில கிராமங்களுக்கு இன்சூரன்ஸ் பட்டியலில் பெயர்கள் வந்துள்ளன. மேலும் குறுவை சாகுபடியில் ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து சாகுபடியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த 13 கிராமங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் விடுபட்ட 13 கிராமங்களுக்கும் உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.