திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள மணலி கிராமத்தைச் சுற்றிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளதால், அதனைக்கடந்து வரக்கூடிய பாசன வாய்க்கால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால், மேட்டூரில் இருந்து வரும் நீர் துளிகூட தங்கள் பகுதிக்கு வரவில்லை என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய விவசாயிகள், 'எங்களுடைய மணலி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்து வந்தோம்.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தின் பாசன வாய்க்கால், புதுச்சேரி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைக் கடந்து வருவதால், புதுச்சேரி பகுதி மக்கள் எங்களின் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்துக்கொண்டு வீடுகள், மதகுகள் கட்டி, வாய்க்கால்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மேட்டூர் நீர் வராமல் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அலட்சியம் காட்டும் அலுவலர்கள்
இதுகுறித்துப் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
புதுச்சேரி அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அலட்சியம் செய்து வருவதால், எங்கள் பகுதியில் விளை நிலங்கள் முழுவதும் தரிசாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி மக்கள் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூர்வாரி கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுக்கரைபுதூரில் முளைவிட்ட நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்