திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இந்நிலையில், தற்போது சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழக்கடைகளை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சாலையோரத்தில் கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறிய பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை அகற்ற முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், தங்களின் நலன்கருதி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.