திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை. உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் கருவறையின் முன் பரணி தீபமும், மாலை கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாக தீபமும் ஏற்றப்பட்டுக் கொண்டாடப்பட உள்ளது.
நடப்பாண்டுக்கான தீபத் திருவிழா நகரின் காவல் தெய்வமான துர்கை அம்மனின் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வெள்ளி மூஷீக வாகனத்தில் மாட வீதியில் வீதி உலா வந்தனர்.
விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 63 அடி உயர தங்க முலாம் பூசிய கொடி மரத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்!