திருவண்ணாமலை: யாரும் வேலை செய்வதில்லை என திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் குற்றம்சாட்டவே, "நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள்’’ என்றும்; ''அதிகாரிகள் மீது குற்றம் இருந்தால் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லுங்கள்'' என்றும்; இவ்வாறு பொதுவெளியில் குற்றம்சாட்டாதீர்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கொதிப்பாக பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், ''மாவட்ட ஆட்சியர் வேலை செய்வதில்லை என எப்படி குற்றம்சாட்ட முடியும் என கேள்வியெழுப்பியதோடு, எனக்கே சர்க்கரை நோய் வந்துவிட்டது" எனவும் உரத்த குரலில் ஆவேசத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.21) விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அப்போது, அக்கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருந்தனர். இந்நிலையில், விவசாயிகள் தங்களின் குறைகளை ஒவ்வொருவராக மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் விவசாயி ஹாகீர் ஷா என்பவர் 'அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் மெத்தனப்போக்கோடு செயல்படுகிறார்கள்' என குற்றம்சாட்டினார். இதைக் கேட்ட, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆவேசமடைந்தார்.
"மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலைசெய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?. நள்ளிரவைத் தாண்டியும் அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு தான், நான் உறங்கச் செல்கிறேன்'' என்றும் ஆவேசத்துடன் உரையாற்றினார்.
''விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏதோ பேச வேண்டும் என்று பேச வேண்டாம், அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து தெரிவியுங்கள். அவர்களைப் பற்றி அவதூறாக பொதுவெளியில் பேசக்கூடாது'' என்று காட்டமாக பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், "அதிகாரிகள் மற்றும் நான் உட்பட ஒவ்வொரு கூட்டத்திலும் மனுக்களை பெற்றுக்கொண்டு பசியுடன் 4:00 மணிக்கு மேல் செல்கின்றோம். பல அதிகாரிகள் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தும் பல சமயங்களில் மூன்றரை மணி, நான்கு மணி, நான்கரை மணி என உணவருந்த செல்கிறோம். இத்தகைய நிலையில், தனக்கும் சர்க்கரை நோய்ப்பாதிப்பு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. அது உங்களுக்கு தெரியுமா?'' என்று கேள்வியெழுப்பியவாறே ''நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள்'' என குற்றம்சாட்டியவரை பார்த்து ஆவேசமாக பொங்கி எழுந்தார். இந்த காரசாரமான விவாதம் விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனிடையே, ''அதிகாரிகளை பொது வெளியில் குற்றம் சாட்டக்கூடாது, அவர்கள் மீது குற்றம் இருந்தால் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து தெரிவிக்க வேண்டும், அதிகாரிகள் அனைவரும் பசி பட்டினியுடன் வேலை செய்து வருகின்றோம்'' என்று கூறும்போது அதிகாரிகள் அனைவரும் கைத்தட்டி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆவேசத்துடன் பேசிய நிகழ்வு பெறும் பரபரப்பை கூட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிவிடுவார்கள் - சீமான்