திருவண்ணாமலை: வாணாபுரம் அடுத்த பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன் (60). இவரது மனைவி விக்டோரியம்மாள் (55). இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
பச்சையப்பனுக்கு அதே கிராமத்தில் சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் மீன் குட்டை அமைத்து, மீன் வளர்த்து வருகிறார்.
இதனால் இவர் இரவில் அங்கு காவலுக்குச் செல்வது வழக்கம். இதேபோல், நேற்றிரவு (ஆக.27) நிலத்திற்குச் சென்ற பச்சையப்பன், காலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி விக்டோரியம்மாள், நிலத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
துப்பாக்கியால் தாக்கப்பட்டார்
அப்போது, பச்சையப்பனின் மார்பு, கழுத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த காயங்களுடன் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனடியாக வாணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய துணை காவல் கண்காணப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட காவல் துறையினர், படுகாயமடைந்த பச்சையப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணம்
மேலும் இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பச்சையப்பனிடம் நடத்திய விசாரணையில், தண்ணை மூவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதாகவும், தனக்கு பேரயாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் , அவரது மனைவி ஜெயந்தி, அன்பழகனின் நண்பர் சுப்பிரமணி ஆகிய மூவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
![காவல் துறை விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-01-vanapuram-former-attack-pho-scr-tn10048_28082021153535_2808f_1630145135_494.jpg)
இதையடுத்து, அவர்கள் மூவரையும் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பச்சையப்பனின் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்காரரான பூமிநாதன் என்பவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தை 2014ஆம் ஆண்டு பச்சையப்பனுக்கு விற்றுள்ளார். ஆனால், பூமிநாதனின் அண்ணன் அன்பழகன் என்பவருக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மூவருக்கு சிறை
இதனால், அன்பழகன் அவரது மனைவி ஜெயந்தி, நண்பர் சுப்பிரமணி ஆகியோருடன் நிலத்துக்குச் சென்று, அங்கு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சையப்பனை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு, அந்த துப்பாக்கியை அருகிலுள்ள குட்டையில் வீசி விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
![மூவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12905554_653_12905554_1630167172290.png)
இதையடுத்து, குட்டையில் வீசிய துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்கள் மூவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை - சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது!