திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட சேர்ப்பாபட்டு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாடு வழங்கும் தருவாயில் அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேர்ப்பாபட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
சேர்ப்பாபட்டு ஊராட்சியில் உள்ள சேர்ப்பாபட்டு, வாய்க்கலாப்பட்டு, சே. மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவச கறவை மாடு திட்டத்தின் கீழ் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்த விவசாயிகள் ஆகியோர்களை தேர்வு செய்து கால்நடை துறை சார்பாக கறவை மாடு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சேர்ப்பாபட்டு ஊராட்சியைச் சேர்ந்த 50 பேரை தேர்வு செய்து கறவை மாடு வாங்க சான்றிதழும் வழங்கி உள்ளனர். தொடர்ந்து கறவை மாடு பெறுவதற்காக மக்கள் சென்றபோது அதே ஊரில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த கோபால், பச்சையப்பன், எத்திராஜ், சீதா உள்ளிட்ட ஏழு பேர் தங்களுக்கு கறவை மாடு வழங்கவில்லை என்பதால் மற்றவர்களுக்கும் கறவை மாடு வழங்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதனால் தேர்வு செய்த பயனாளிகளுக்கு உடனடியாக அரசால் வழங்கக்கூடிய இலவச கறவை மாடுகளை வழங்கவேண்டும் எனக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!