திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு ஏடிஎம் மையங்களிலும், கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏடிஎம் மையத்திலும் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கோலார், குஜராத், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் திருவண்ணாமலை தனிப்படை காவல் துறையினர், 10 நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் கொள்ளை அடித்தவர்கள் கோலாரில் இருந்து பெங்களூரு வழியாக விமானத்தில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. குறிப்பாக, இந்த கொள்ளை வழக்கில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கோலார் பகுதியில், திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், குஜராத் பகுதியில் வேலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் ஹரியானா மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஹரியானாவில் திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், கொள்ளை கும்பலின் தலைவனான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு விமானம் மூலம் நேற்று (பிப்.17) இரவு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக சாலை மார்க்கமாக இன்று (பிப்.18) அதிகாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கைரைகை, சிசிடிவி காட்சி உள்ளிட்ட முக்கிய விசாரணை நடத்திய பின்ன,ர் இன்று மாலை வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹரியானாவில் கைதான தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை வருகை!